
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பம்
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக பெப்ரவரி 27 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் வரை விசேட பேருந்து சேவைகளும், காலை 5 மணி முதல் கச்சதீவுக்கான படகுச் சேவைகளும் ஆரம்பமாகும். ஒரு வழிப் பயணக் கட்டணமாக 1,200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தமது விபரங்களை இரு பிரதிகளில் கொண்டு வருவதுடன், சொந்தப் படகுகளில் வருவோர் கடற்படையின் முன் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். தீவுப்பகுதியில் உணவு சமைப்பதற்கும், மதுபானம் மற்றும் புகைத்தலுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
