நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு 10 மணி முதல் அந்நாட்டு இராணுவமும் பிற பாதுகாப்புப் படையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழிப்பதைச் செய்து வருவதாக நேபாள இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து நேபாளத்தில் போராட்டக்காரர்கள் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்து எரித்தனர், மேலும் பல கட்டிடங்களை அழித்துள்ளனர்.
நேபாளத்தில் நடந்த போராட்டங்களில் பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இநேரத்தில், நாட்டின் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
26 சமூக ஊடக தளங்களை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றத்தின் முன் நேற்று போராட்டங்கள் தொடங்கின.
இதற்கிடையில், நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் வீட்டிலேயே இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.