
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் 190 பேர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் 90 உயிரிழப்புகளும் , நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும் குருநாகல் மாவட்டத்தில் அனர்த்தங்களால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 27 ,663 குடும்பங்களைச் சேர்ந்த 89 , 857 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
