உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள் – ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

உணவுக்காக ஏங்கும் இலங்கை மக்கள் – ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கம் காரணமாக எதிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கொவிட் தொற்று, அறகலய போராட்டம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர முடியாத 80 வீதமான மக்கள் இன்னமும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். அன்றாடம் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத நிலையில் பல இலட்சக்கணக்கான மக்கள் இருப்பதாக சில ஆய்வுகளும் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், உணவுப் பணவீக்கம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டை மக்கள் எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (பெப்ரவரி 26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான பணிகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்தில் பொருளாதார பணவீக்கம் அதிகரித்து சமூகத்தில் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்பட்டால் கிராமப்புற, அரை நகர்ப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் ஊட்டச்சத்து நெருக்கடியை கடுமையாக எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மக்களின் வாழ்க்கை இன்னும் சீரடையாததால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அனுராதபுரம், மொனராகலை, பொலன்னறுவை மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தோட்ட மக்களின் வருமானங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் தினசரி உணவுக்கு அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

வாழ்க்கையை கொண்டுசெல்ல தேவையான உணவுப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதால், இந்த மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டெழ முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கென நிலையான வருமான ஆதாரங்களும் இல்லை.

தற்போது இந்தப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை தொடர்ந்தால், உணவுக்காகச் செலவிடும் பணத்தின் அளவு அதிகரித்து வருமான ஆதாரங்கள் குறையும்.  அறுவடை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால், இளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து நெருக்கடி ஏற்படக்கூடும்.

இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை இலக்காகக் கொண்ட வெற்றிகரமான ஊட்டச்சத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் இதற்கு முன்னர் வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் கணிசமான அளவு பணத்தை ஒதுக்கியிருந்தாலும், அவை நடைமுறையில் மக்களுக்கு வழங்கப்படவில்லை.” என்றார்.

Share This