வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகும் இலங்கையர்கள் – ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் பதிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகும் இலங்கையர்கள் – ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் பதிவு

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 6,216 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி சம்பவங்களுக்கு இவ்வாறு 6,216 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மோசடிகளில் சிக்கியவர்களுள் அதிகமானவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 3104 ஆகும்.

2020ஆம் ஆண்டில் 556 பேரும் , 2021ஆம் ஆண்டில் 336 பேரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்கியுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் 599 பேர் இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளதுடன் 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1621 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரையில் 129 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் ருமேனியா, லிதுவேனியா, கனடா , மோல்டா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகமானவர்கள் வெளிநாடு செல்ல எதிர்ப்பார்த்துள்ளனர்.

குறித்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 863 வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகமானவை கடந்த 2024ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 298 ஆகும்.

2020ஆம் ஆண்டில் 137 நிறுவனங்களும், 2021ஆம் ஆண்டில் 81 நிறுவனங்களும், 2022ஆம் ஆண்டில் 116 நிறுவனங்களும், 2023ஆம் ஆண்டில் 231 நிறுவனங்களும் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 50 நிறுவனங்கள் இவ்வாறு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Share This