பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் – விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்

பிரித்தானியாவில் தனது இரு மருமகள்களையும் காப்பாற்றுவதற்காக நீர்வீழ்ச்சியில் குதித்த 27 வயதான மோகன் என்றழைக்கப்படும் மோகனநீதன் முருகானந்தராஜா உயிரிழந்துள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மரணத்தை விபத்தாக அறிவித்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பிறந்த மோகன் ஒரு விமானி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரால் காப்பாற்றப்பட்ட இரு குழந்தைகளும் அவரின் மருமகள்கள் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரையும் பாதுகாப்பாக மீட்ட மோகன் இறுதியில் நீரில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்வான்சி நகரைச் சேர்ந்த மோகன், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், பிரெகான் பீக்கன்ஸ் என்றும் அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள ஸ்க்வட் ஒய் பன்வர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்டச் சென்றிருந்தனர்.
இதன்போது “வானிலை இனிமையாக இருந்ததால் சிலர் நீருக்குள் இறங்க முடிவு செய்தனர்”. இதன்போது இரு குழந்தைகளும் நீரில் மூழ்கியதாகவும் அவர்களை காப்பாற்ற மோகன் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, மோகனநீதன் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக சவுத் வேல்ஸ் மத்திய பகுதி மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மோகனின் நினைவாக சுமார் 3,000 திரட்டப்பட்ட பவுண்ட்ஸ் ஒன்லைன் நிதி திரட்டும் பிரச்சாரத்தில் பங்களித்தவர்களால் மோகன் ஒரு “ஹீரோ” என்று வர்ணிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.