மதத்தின் பெயரால் பாலியல் துஷ்பிரயோகம் – அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு சிறை
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
52 வயதான தோல் மருத்துவரான பிரதீப் திசாநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மதத்தின் போர்வையில் தனது துஷ்பிரயோகத்தை தந்திரமாக முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் தன்னை ஒரு கடவுள் போன்ற நபராகக் காட்டிக் கொண்டு, தன்னை பின்தொடரும் பக்தர் ஒருவரின் மகள்களை துஷ்பிரயோகம் செய்ய தனது ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.
முன்னதாக அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை என்று கருதப்பட்டதால் மேல்முறையீட்டிற்கும் அதிகரித்த தண்டனைக்கும் வழிவகுத்ததாக கூறப்படுகின்றது.
புத்த மதம் மற்றும் கிறிஸ்தவ மதக் கூற்றுகளை இணைத்து அவர் தனது வழிபாட்டு முறைகளை நிறுவியதாக கூறப்படுகின்றது.
அடிப்படை சுகாதாரத்திற்கான அனுமதி கோருதல் மற்றும் ஒரே பாலின வாழ்க்கை ஏற்பாடுகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான விதிகளை அவர் தனது ஆதரவாளர்கள் மீது விதித்தாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அவர் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை இடம்பெற்றதுடன், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தனது அநாகரீகமான செயல்களுக்கான பொறுப்பை ஒப்புக்கொண்ட அதே வேளையில், திசாநாயக்க தனது செயல்களை நியாயப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், “நான் இனி சமூகத்தில் இருப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். நான் என்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு மனந்திரும்ப விரும்புகிறேன்” என்று ஒரு உளவியலாளருடனான ஒரு நேர்காணலில், திசாநாயக்க கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய சுகாதார பயிற்சியாளர் ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவம் செய்வதற்கான அவரது உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.