விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – 10 பில்லியன் டொலர் வருமான இலக்கு

விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – 10 பில்லியன் டொலர் வருமான இலக்கு

(ச.நிலக்சிகா)

ஸ்ரீலங்கா விமான சேவையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதன் ஊடாக 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இந்த நிகழ்வில் தெரிவித்தாவது,

”கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கையில் 27 விமானங்கள் இருந்தன. தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையில் 22 விமானங்களே உள்ளன. இதனை எதிர்வரும் 5 வருடங்களில் இருமடங்காக்கி 50 விமானங்களாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதன் ஊடாக நாட்டின் சுற்றுலாத்துறை வருட வருமானத்தை 10 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூன்று விமானங்களை ஸ்ரீலங்கன் விமான சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25-30 வீதத்தால் ஸ்ரீலங்கன் விமான சேவையின் திறனை அதிகரிக்க உத்தேசித்துள்ளோம்.” என்றார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகவும் அதனை தனியார் துறைக்கு விற்பனை செய்யப் போவதாகவும் கடந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். என்றாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் 5 வருடங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தது.

இந்தப் பின்புலத்திலேயே ரிச்சர்ட் நட்டல், ஸ்ரீலங்கன் விமான சேவையின் எதிர்கால இலக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Share This