கடைசி நேர கோலினால் இலங்கை இளையோர் பஹ்ரைனிடம் தோல்வி

கடைசி நேர கோலினால் இலங்கை இளையோர் பஹ்ரைனிடம் தோல்வி

சீனாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் பஹ்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் எதிரணியின் கடைசி நேர கோலினால் தோல்வியை சந்தித்தது.

சீனாவின் டொங்லியாங்கில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் பஹ்ரைன் இளையோர் அணி சார்பில் அல் ஜசாப் 27 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார். எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவில் 47 ஆவது நிமிடத்தில் வைத்து இலங்கை அணித் தலைவரான மொஹமட் செயித் பதில் கோல் திருப்பினார்.

இதனால் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மேலதிக நேரத்தில் வைத்து பஹ்ரைன் பின்கள வீரரான குமைல் பதல் அல்சட்ராவி அந்த அணிக்கு வெற்றி கோலை புகுத்தினார்.

முதல்முறையாக 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதிபெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை இளையோர் அணி இந்தத் தகுதிச் சுற்றில் ஏ குழுவிலேயே ஆடி வருகிறது.

இலங்கை 17 வயதுக்கு உட்பட்ட அணி தனது முதல் போட்டியில் புரூணை அணியை 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை அணி தனது குழுவில் தற்போது இரு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே சீனா (6 புள்ளிகள்), பங்களாதேஷ் (6 புள்ளிகள்) மற்றும் பஹ்ரைன் (3 புள்ளிகள்) அணிகள் உள்ளன.

அடுத்து இலங்கை 17 வயதுக்கு உட்பட்ட அணி தனது மூன்றாவது போட்டியில் இன்று (26) பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )