இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது.

அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா கையெழுத்திட்டார்.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர ,

“ குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.” என்று குறிப்பிட்டார்.
இந்த முயற்சி நமது பரஸ்பர அர்ப்பணிப்பு, பகிரப்பட்ட மூலோபாய நலன்களை பிரதிபலிக்கிறது.

மேலும் இந்த கூட்டாண்மை திறன் மேம்பாடு, கூட்டு பயிற்சி, மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, சைபர் பாதுகாப்பு, அமைதி காப்பு நடவடிக்கைகள் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.” எனவும் அவர் கூறினார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க தேசிய காவல்படையுடன் கூட்டு சேர்ந்த 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கையம் இணைந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது அனர்த்த மீட்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை பிரதம அதிகாரி, இலங்கை கடலோர பாதுகாப்பு படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இரசாயன ஆயுதங்களுக்கெதிரான தேசிய ஆணையம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் நாயகம், அமெரிக்க தூதரக அதிகாரிகள், மொன்டானா தேசிய காவல் படை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This