
இலங்கையில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ளது.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தடை செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அரசாங்கமும் இந்த வடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது மாணவர்கள் இணையத்தில் இணையும்போது ஏற்படும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை நிவர்த்தி செய்ய ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பான 10,455 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பான 8,514 முறைப்பாடுகளும், அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்பில்லாத 1,941 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு பெறப்பட்ட முறைப்பாடுகளில் 545 பாலியல் வன்கொடுமை தொடர்பானவை என்பதுடன், 231 முறைப்பாடுகள் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை.
கடந்த ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள் நடந்துள்ளதாகவும், 38 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான சைபர் அச்சுறுத்தல் தொடர்பாக 150 முறைப்பாடுகளும், தற்கொலை முயற்சி தொடர்பாக 20 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைவிடப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்றது தொடர்பாக ஒன்பது முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன.
