நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு

நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு

நாசிசம் மற்றும் நவ நாசிசத்தை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா, இலங்கை உட்பட 119 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிராக 53 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், 10 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

‘நாசிசம், நவ-நாசிசம் மற்றும் இந்த கோட்பாட்டை சார்ந்த விடயங்களை ஊக்குவித்தல், இனவாதம், இனப் பாகுபாடு, இனவெறி சார்ந்த வடிவங்களைத் தூண்டுவதற்கு எதிராக போரிடுதல்’ என்ற தலைப்பில் ரஷ்யாவின் ஆதரவுடன் ஐ.நா பொதுச் சபையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை ரஷ்யா, இலங்கை, மாலைத்தீவு,  தென்னாப்பிரிக்கா, லெசோதோ உட்பட 119 நாடுகள் ஆதரித்தன.

எனினும், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, உக்ரைன், ஜப்பான் உள்ளிட்ட 53 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை மறுபரிசீலனை செய்ய அல்லது நாஜி சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் கண்டிக்கும் தீர்மானமாக இது உள்ளது.

நவ நாசிசத்தை நிராகரிப்பது, நாஜி நபர்களை ஊக்குவிப்பது மற்றும் வாஃபென் எஸ்எஸ் அமைப்பை எந்த வடிவத்திலும் நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை ரஷ்யாவின் இந்த ஆதரவு தீர்மானம் வலியுறுத்துகிறது.  இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், இனவெறி, இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையின் அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

Share This