அமெரிக்க வரி சுனாமில் இருந்து மீள வியூகம் வகுக்கிறது இலங்கை – ஜனாதிபதி

” அமெரிக்காவின் வரி சுனாமியில் இருந்து தப்பிப்பதற்குரிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சிலவேளை வரி சுனாமியில் சிக்க நேரிட்டால் அதிலிருந்து மீள்வதற்குரிய திட்டங்களும் வகுக்கப்பட்டுவருகின்றன.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. இந்த சவாலுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும்.
உலக நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் தொற்று நோய்கள் போன்ற காரணங்களால் எந்நேரத்திலும் பொருளாதாரத்துக்கு தாக்கம் வரக்கூடும். எனவே, எந்த சூழ்நிலையையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையிலான பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு நான் தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதம் கிடைத்தது என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி சுனாமியால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படாத வகையிலான முடிவுகளை எடுப்பதற்கு முயற்சித்துவருகின்றோம். அந்த சுனாமியில் இருந்து தப்பிப்பதற்கு வியூகம் வகுக்கப்படுகின்றது. சிலவேளை சுனாமியின் சிக்க வேண்டியேற்படின் அதற்கு முகங்கொடுப்பதற்கும் வியூகம் வகுக்கப்படுகின்றது.” – என்றார்.