தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம்

தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம்

உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களாக அரசியல் நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைக்குள் அனுபவம் வாய்ந்த, தொழில்முறை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் இருக்கும்போது, ​​இராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படுவதை கண்டித்து இலங்கை வெளியுறவு சேவை சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு சேவை என்பதை அந்த அறிக்கை நினைவு கூர்ந்தது.

இதேவேளை, தொழில்முறை வெளியுறவு சேவை அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் இராஜதந்திர சேவை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தூதரகங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்வது, தேர்தலின் போது அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கு முரணானது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலின் போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையில், தொழில் இராஜதந்திரிகளின் தொழில்முறை சிறப்பை அடிப்படையாகக் கொண்ட புள்ளிகள் முறையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இராஜதந்திர சேவைக்கான அரசியல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அத்தகைய கலந்துரையாடலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This