தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை

தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டு சரித்திரம் படைத்தது.

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் துர்க்மேனிஸ்தானை இலங்கை வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் மத்திய ஆசிய நாடு ஒன்றை இலங்கை வெற்றிகொண்டதும் இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் விளையாடப்பட்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆறு போட்டிகளில் ஐந்தில் துர்க்மேனிஸ்தான் வெற்றிபெற்றிருந்ததுடன் ஒரு போட்டி (2004) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் இலங்கை சாதிக்குமா என்ற கேள்வி இயல்பாகவே இருந்துவந்தது.

ஆனால், இன்றைய போட்டியில் மிக அற்புதமாக விளையாடிய இலங்கை அணி, 57ஆவது நிமிடத்தில் மணிமெல்துர லியோன் பெரேரா அடித்த கோல் மூலம் வெற்றியீட்டியது.

அந்த சந்தர்ப்பத்தில் ஆதவன் ராஜமோகன் மிக அருகில் இருந்து பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு லியோன் பெரேரா பலமாக உதைத்து துர்க்மேனிஸ்தான் கோல்காப்பாளர் சரியெவ் ரசூலை திக்குமுக்காடவைத்தார்.

எவ்வாறாயினும் இந்த வெற்றியில் மிகப் பெரிய பங்காற்றியவர் யாழ். தந்தைக்கு பிறந்து ஜேர்மனியில் கழகமட்ட கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜேசன் தயாபரன் ஆவார்.

துர்க்மேனிஸ்தான் வீரர்கள் இரண்டு சந்தர்பங்களில் (58ஆவது மற்றும் 89ஆவது நிமிடங்களில்) கோல் போட எடுத்த முயற்சிகளை கோல் வாயிலில் வைத்து மிக அற்புதமாக ஜேசன் தயாபாரன் தடுத்து இலங்கையைக் காப்பாற்றி வெற்றி அடையச் செய்தார்.

இதனிடையே இலங்கை அணித் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேராவும் ஒரு கோலை தடுத்து நிறுத்தினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் துர்க்மேனிஸ்தானின் முயற்சி ஒன்று கோல்காப்பின் குறுக்கு கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.

போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இரண்டு நிச்சயமான கோல்களைத் தடுத்து நிறுத்தி இலங்கையைக் காப்பாற்றி வெற்றி அடையச் செய்ததைப் பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என 23ஆம் இலக்க பின்கள வீரர் ஜேசன் தயாபரனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது,

‘இரண்டு கோல்களைத் தடுத்தது குறித்து நான் பெருமை படுகிறேன். ஆனால், இலங்கை அணியின் வெற்றியை அதனை விட பெருமையாக கருதுகிறேன். இந்த வெற்றிக்கு எனது தனிப்பட்ட ஆற்றல்கள் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.

இந்த வெற்றி முழு அணியினதும் கூட்டு முயற்சியாகும். போட்டியில் விளையாடிய வீரர்கள், ஆசனங்களில் அமர்ந்திருந்த மாற்று வீரர்கள், பயிற்றுநர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியில் பங்காற்றியிருந்தார்கள் என்றே நான் கூறுவேன்.

‘இலங்கையின் இந்த சரித்திரம் வாய்ந்த வெற்றியை எனது மனைவிக்கும் மகனுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தருவார்கள்’ என பதிலளித்தார்.

இதேவேளை, துர்க்மேனிஸ்தானுடனான இந்த வெற்றி முழு இலங்கைக்கும் கிடைத்த வெற்றி என பெருமிதத்துடன் தெரிவித்த பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தெய்ரி, இரண்டாம் கட்டப் போட்டி இலகுவாக அமையாது என்றார்.

‘நாளைய தினம் இலங்கை வீரர்கள் நன்கு ஒய்வு எடுத்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை எதிர்த்தாடுவதற்காக பயணிக்கவுள்ளோம்.

இந்தப் பயணம் 23 மணிநேரம் நீடிக்கும். எமது பயணத்தில் இடைவழி விமான நிலையத்தில் (Transit) தங்கும் நேரம் சுமார் 8 மணித்தியாலங்களாகும். அங்குதான் எமது வீரர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவேண்டியுள்ளது.

அதன் பின்னர் துர்க்மேனிஸ்தான் சென்றடைந்ததும் இரண்டாம் கட்டப் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபடுவோம். துர்க்மேனிஸ்தானை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இலகுவல்ல.

ஆனால், சிறந்த வியூகங்களை அமைத்து வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார் அப்தூல்லா அல்முத்தெய்ரி.

இது இவ்வாறிருக்க, இலங்கையிடம் அடைந்த தோல்வி அதிர்ச்சி தருவதாகத் தெரிவித்த துர்க்மேனிஸ்தான் பயிற்றுநர் ரோவ்ஷென் மெர்டோல், எமது தோல்விக்கான குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு இரண்டாம் கட்டப் போட்டியில் வெற்றிபெற முயற்சிப்போம்’ என்றார்.

இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக இரண்டு கோல்களைத் தடுத்து நிறுத்திய இலங்கையின் பின்கள் வீரர் ஜேசன் தயாபரன் தெரிவானார்.

Share This