இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து – கோப் குழு வழங்கியுள்ள ஆலோசனை

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து – கோப் குழு வழங்கியுள்ள ஆலோசனை

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான ‘ஒழுங்குபடுத்தல்’ பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனைப் பரிசீலிப்பதற்காக, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், 2008 மே 22ஆம் திகதிய 1550/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் 07 மற்றும் 08 ஆம் பிரிவுகளின்படி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அறவிடப்பட்ட வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் (OSS) ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டுமாக இருந்தாலும், வர்த்தமானி அறிவிப்பு வெளியானதிலிருந்து, இந்த வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்படாமல், அதிகாரசபையின் வருமானமாகவே அடையாளம் காணப்பட்டு, அதிகாரசபையினால் தக்கவைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், 2023 நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, அறவிடப்பட்ட இந்த வருமானத்தில், அதிகாரசபையின் செலவுகளுக்காக மாதாந்தம் 90 மில்லியன் ரூபாய் தக்கவைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை திறைசேரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றாலும், 2018 முதல் 2023 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட 20,630 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பது கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு தக்கவைக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்படும் வருமானமே இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதானமான வருமான வழியாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், தக்கவைக்கப்பட்ட இந்த நிதி மூலம் ஒழுங்குபடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெற்றனவா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியதுடன், இந்த நிதி தொடர்பான அமைச்சரவை தீர்மானமும் மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் வீரவிலவில் பராமரிக்கப்படும் பங்களாவின் புனரமைப்புப் பணிகள் குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கொள்வனவுத் திட்டத்தில் 4.5 மில்லியன் ரூபாய்க்கு அங்கீகரிக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகளின் இடைநடுவில் அது 24 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது.

எனினும், இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்தத் தகவல்கள் சரியானவை அல்ல என்றும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பின்னர் கணக்காய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதற்கமைய , சரியான தகவல்களை கணக்காய்வுக்கு வழங்காதது குறித்து குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சரியான தகவல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், அதற்கு முன்னர் இருந்த பிரதான குறைபாடுகள் அப்படியே தொடர்வதாக பௌதீக பரிசோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். கதவுகளைப் பழுதுபார்ப்பதற்காக மாத்திரம் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது குறித்தும் இதன்போது குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இந்தக் கட்டடங்களில் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட செயன்முறை குறித்து மீண்டும் முழுமையான விசாரணை நடத்துமாறு குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் நிலவும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்போது 14 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிலவி வருவது குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொள்ளும் பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன், திறன் மற்றும் அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் சம்பள வேறுபாடுகள் காரணமாக இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை எனத் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சம்பந்தப்பட்ட அனுமதிகள் கிடைத்தவுடன் இந்த பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தற்போது இலங்கையைப் பற்றி பிரஜைகளிடையே ஒரு நல்ல மனப்பாங்கு உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக திறமையும் தகுதியும் கொண்டவர்கள் சம்பளத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொழில்களின் மீதுள்ள விருப்பம் காரணமாக பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் உள்ள பதவிகளுக்கான சம்பளங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், இந்தத் துறை தொடர்பான அறிவுடைய நபர்களை நாட்டிற்கு உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் குழு அறிவுறுத்தியது.

Share This