விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும்

விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும்

விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர்.

அனைவரும் அரசாங்கம் மீது வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய ‘விளையாட்டு நகரமாக’ மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது.

நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது.

பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்கு கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார்.

விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தமது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றியும் தெரிவித்தார்.

Share This