புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2025 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) காலி முகத்திடல் வளாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு நகரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், புறக்கோட்டை, கொம்பனி வீதி, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத் தோட்டம் போன்ற பொலிஸ் பிரிவுகளில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
காலி முகத்திடலில் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும், வாகனங்கள் தரிப்பதற்காக வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.