துமிந்த சில்வாவுக்கு சிறையில் விசேட சலுகை – ஆணையாளர் விளக்கம்
சிறைக்கைதி துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகளை வெளியிட்டு சில குழுக்கள் முயற்சிப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் இந்த கைதி சிகிச்சை பெற்று வரும் அறையில் நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு பொதுவாக வழங்கப்படும் வசதிகளுக்கு மேலதிகமாக துமிந்த சில்வா என்ற கைதிக்கு மட்டும் எந்தவிதமான மேலதிக வசதிகளும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வார்டு தொடர்பான உண்மைகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் நேற்று (16) வெளியானது. கைதி துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சாதாரண அறையில் வைத்திய அறிவுறுத்தலுக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நோய்வாய்ப்பட்ட ஒவ்வொரு கைதியையும் சிறைச்சாலை மருத்துவரிடம் ஆஜர்படுத்திய பின்னர், சிறை வைத்தியரின் அறிவுறுத்தலின் படி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு வசிப்பிட சிகிச்சைக்காக அனுப்புவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
மருத்துவரின் பரிந்துரைகளுக்கு அமைய மேலதிக சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த கைதி, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவு சிகிச்சையை முடித்துக் கொண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டாலும் குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.