பிரித்தானிய உயர்ஸ்தானிகர், வலுசக்தி அமைச்சருக்கு இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (01) காலை வலுசக்தி அமைச்சில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே வலுசக்தி துறையில் உறவுகளை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்தக் சந்திப்பில், குறிப்பாக நாட்டின் மின்சாரத் துறை தொடர்பான தகவல்கள், திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
காற்றாலை மின்சாரம் உட்பட மின்சாரத் துறையில் புதிய போக்குகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தேவைக்கேற்ப சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்கள் மூலம் நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இணக்கம் வௌியிட்டுள்ளார்.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியில் பெரும் பங்களிப்பை வழங்கும் நீர்மின்சார அமைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான விக்டோரியா நீர்மின் நிலையம் பிரித்தானிய அரசாங்கத்தின் நன்கொடை என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததாக அமைச்சர் கூறினார்.
விக்டோரியா மின் உற்பத்தி நிலையத்தின் திறனை அதன் அசல் திட்டத்தின்படி மேலும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இதற்காக பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
தாம் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைப்பதாகவும், அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்குவதாகவும் உயர் ஸ்தானிகர் கூறினார்.