
மருந்து தரப் பரிசோதனை குறித்து விசேட கலந்துரையாடல்
மருந்துகளின் தரப் பரிசோதனை நடவடிக்கைகளை உரிய தரத்துடன் முன்னெடுத்துச் செல்லும் செயல்முறையை விரிவுபடுத்துவது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மருந்துகளின் தரத்தைப் பேணும் செயல்முறையை விரிவுபடுத்தும் போது, மருந்து தரப் பரிசோதனை நடவடிக்கைகளை முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்வது குறித்து இந்தக் கலந்துரையாடலில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வுகூடங்களில் மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுதல், அச்செயல்முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டிய அளவுகளை அதிகரித்தல் மற்றும் வழங்கப்படும் மருந்து தரப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு எழும் பிரச்சினைகள் மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரப் பரிசோதனை ஆய்வுகூடத்தின் ஊடாக மருந்து தரப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில மட்டுப்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்நடவடிக்கைகளை மேலும் முறையான மற்றும் விரிவான வேலைத்திட்டமாக மேம்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டம் அவசியம் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அங்கு சுட்டிக்காட்டினார்.
அதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால், அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை ஒரு வகையில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், மருந்து விநியோகச் செயல்முறைக்குத் தடையேற்படாத வகையில், பிரச்சினைக்குரிய மருந்துகளுக்கு இவ்வேலைத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
