மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார்.
மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை
நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும்.