இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம்

இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம்

2023-2025 டெஸ்ட் உலகக் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கையை தென்னாப்பிரிக்கா தகர்த்துள்ளது.

க்கெபர்ஹாவில் இடம்பெற்ற இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 109 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தெரிவு செய்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 358 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தப் போட்டியில் ரியான் ரிக்கல்டன் தனது சர்வதேச அறிமுக டெஸ்ட் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் 101 ஓட்டங்களை குவித்திருந்தார். மேலும், கைல் வெர்ரைன் 105 ஓட்டங்களை குவித்திருந்தார்.

முதல் இன்னிங்சில் லஹிரு குமார 79 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய இலங்கை அணி 328 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதும் நிஸ்ஸங்க 89 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமல் மற்றும் ஏஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென்னாப்பிரிக்கா அணியின் டேன் பேட்டர்சன் 71 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களையும், மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மஹராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 30 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா 317 ஓட்டங்களை குவித்திருந்தது. அணியின் தலைவர் தெம்பா பவுமா 66 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 55 ஓட்டங்களையும் குவித்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ் சார்பாக பிரபாத் ஜயசூரிய ஐந்து விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் அசிதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்படி, இலங்கை அணி தீர்க்கமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 348 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, ​​அரை சதத்தை நெருங்கிய அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் மீதான நம்பிக்கை பொய்க்க அதிக நேரம் எடுக்கவில்லை.

குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, ​​கேசவ் மஹராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா ககிசோ ரபாடா வீசிய பந்தில் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இலங்கை அணியின் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களான பிரபாத் ஜயசூர்யா, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக பந்துவீசிய தென்னாபிரிக்காவின் கேசவ் மஹராஜ் 76 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும், பேட்டர்சன் மற்றும் ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, இந்தப் போட்டியில் 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக அண்மையில் இரணடாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலிடத்தில் இருந்தது.

எனினும், தற்போது இரண்டாம் இடத்திற்கு அவுஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Share This