உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய ஆறு முறைப்பாடுகள் பதிவு – அதிகளவானவை மாத்தளை பொலிஸ் பிரிவில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய ஆறு முறைப்பாடுகள் பதிவு – அதிகளவானவை மாத்தளை பொலிஸ் பிரிவில்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக நேற்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலான தகவல் அறிக்கையை பொலிஸ் தலைமையகம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, நேற்று (23) தேர்தல் தொடர்பான எந்த குற்றவியல் முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்றும், எனினும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் தலைமையகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாத்தளை பொலிஸ் பிரிவில் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அவையாவன, மாத்தளை-தம்புள்ள வீதியில் அலுவிஹாரயிலிருந்து பலபத்வல சந்தி வரையிலான சாலையில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தளை-ரத்தோட்டை வீதியில் கைகாவல முதல் ரத்தோட்டை வரையிலான பகுதியில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் கொடிகள் காட்சிப்படுத்தப்படுவது குறித்து பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மாத்தளை – ரத்தோட்டை பொலிஸ் பிரிவில் வேட்பாளர்களின் படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலர் உணவு விநியோகம் தொடர்பாக கெபித்திகொல்லாவ பொலிஸ் பிரிவில் உள்ள மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதுடன் பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் ஒரு வேட்பாளர் பிரதான வீதியில் புதிய தெருவிளக்குகளை பொருத்துவது தொடர்பாக பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

மொனராகலை வீதியில் வேட்பாளர் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த பொலிஸ் பிரிவுகளில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This