2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Share This