சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு பெறப்பட்ட அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கட்டளை வெளியிடப்பட்டிருந்ததுடன், பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படுவது காலமாதம் அடைந்ததாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள், முதலீட்டுச் செயற்பாடுகள், புலமைசார் சொத்துக்களின் உரிமைகள், தொலைத்தொடர்பு, ஈ-வணிகம் உள்ளிட்ட துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய சுங்க இறக்குமதி வரிக்கான (CID) தீர்வை வரிகளை இலகுபடுத்தல் மற்றும் இறக்குமதியின் போது விதிக்கப்படும் ஏனைய வரிகளான செஸ் வரி (CESS) மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) என்பன பல்வேறு கட்டங்களில் எவ்வாறான முறையில் இலகுபடுத்தப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விரிவாக விளக்கமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியில் உள்ள விசேட ஆடை உற்பத்தி வலயத்தில் ஒரு முதலீட்டாளரால் தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டத்திற்கான வரிச் சலுகை வழங்குவது தொடர்பான அறிவித்தல் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அங்கீகரிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2399/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் பிரதிநிதி ஒருவரால் குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஆடை தயாரிப்புத் தொடர்பான சாயமிடுதல், ஆடை நெய்தல் போன்றவை ஒரே இடத்திலேயே மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினர். இத்திட்டத்தின் ஊடாக 35 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி செலவீனத்தைக் குறைப்பது இதன் நோக்கம் என்றும், உள்நாட்டில் 490 வேலைவாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆடை தயாரிப்புத் துறையில் உள்ள ஏனைய நாடுகளுக்கு சமாந்தரமாக போட்டிச் சந்தையை கையகப்படுத்த இதுபோன்ற திட்டங்கள் அவசியம் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நியாயமான வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)  சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அரிசி இறக்குமதி அனுமதிப்பத்திர கட்டுப்பட்டை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான ஒழுங்குவிதிகள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. அரிசி இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும், இந்தக் காலகட்டத்தில் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 65 ரூபா வரியினால் அரசாங்கத்திற்கு 10.9 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அரிசித் தட்டுப்பாடு குறித்து குழுவில் ஆராயப்பட்டது. அரிசி உற்பத்தி மற்றும் போதிய தொகையைப் பேணுவது தொடர்பில் துல்லியமான தகவல்களை விவசாய அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்கள் பேணுவதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2384/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீளவும் ஆராயப்பட்டு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காக இந்த ஒழுங்குவிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் சுகாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு தொடர்பான ஒழுங்குவிதிகளில் காணப்படும் பிரச்சினைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் சதுரங்க அபேசிங்க ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமக்கோன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This