அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலை முன்றலிலும் கையெழுத்துப் போராட்டம்
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று யாழ். பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியத்தின் செயலாளர் சி.சிவகஜன் ஆகியோரால் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்துப் பீடங்களினதும் மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்பமிட்டு போராட்டத்துக்கு வலுச் சேர்த்தனர்.
தொடர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் “வெஞ்சிறையின் குரல்” எனும் பாடல் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினரால் குறித்த போராட்டத்தின் நிறைவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அக்கினிச் சிறகுகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இப்பாடலானது மாணிக்கம் ஜெகனின் பாடல் வரிகளில், சங்கீர்த்தனனின் குரலில், சிவ.பத்மஜனால் இசையமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கையெழுத்துப் போராட்டத்துக்குத் தலைமையேற்று கருத்துரையாற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன், “தமிழ் அரசியல் கைதிகளின் கைதானது தனியே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பார்க்கப்படக் கூடிதொன்றல்ல; மாறாக அனைத்துலக மயமாக்கப்பட வேண்டிய தமிழினப் படுகொலையின் நீட்சியேயாகும்.” – என்று குறிப்பிட்டார்.