
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக
05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை அலுவலக விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல்கள் நான்கினை, தலா 90 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்த போது அவர் கைதானார்.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் 2021 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இவர் தவறிழைத்துள்ளதாக அதிகாரிகள் நீதவானிடம் சுட்டிக்காட்டினர்.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான சட்டவிரோத விற்பனைகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதால் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
