2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்

2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்

கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூடு சம்பவம் டிசம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் பல பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. சில பட்டப்பகலில் நடந்தன, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் இடத்திற்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பாராதூரமான ஒன்றாகும் இந்த சம்பவத்தில் நமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டார்.

மேலும், ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரியவில் ஒரு அழகு நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்று அழைக்கப்படும் “கிளப் வசந்த” உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பிரபல பாடகர் கே. சுஜீவா உட்பட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். இவ்வாறான சில துப்பாக்கிச் சூடுகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளதாக, பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கே. புத்திக மனதுங்க வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று டி-56 தாக்குதல் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 20 டி-56 துப்பாக்கிகளை மீட்டெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’

2024 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விடக் குறைவாக பதிவாகியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில், 120 துப்பாக்கிச் சூடுகளில் 54 பேர் கொல்லப்பட்டதுடன், 65 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This