
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – 09 பேர் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (Johannesburg) நகருக்கு மேற்கே உள்ள பெக்கர்ஸ்டால் (Bekkersdal) நகரில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று உணவகமொன்றில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிதாரிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்காவில், அண்மைக் காலமாக தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டோரியா (Pretoria) நகருக்கு அருகிலுள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
