சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கை 12 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
‘இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. ஆகையினால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சீமான் தரப்பின் முன்னிலையான சட்டத்தரணி, “நடிகை வழக்கை மூன்று முறை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் பொலிஸார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.