
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – இதுவரை 25 பேர் உயிரிழப்பு, 8000 விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் வட,கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி வரை சுமார் 2,100 கிலோமீட்டர் பரப்பளவுக்கு சுமார் 1 அடி உயரத்துக்கு பனி சூழ்ந்துள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் தரை வழிப் பாதைகளில் முற்றாக போக்குவரத்து முடங்கியுள்துடன், வான் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. சுமார் 8,000 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
வட,கிழக்கு பகுதியில் மின் வசதி இல்லாது மக்கள் தவித்து வருவதுடன், தகவல் தொடர்புகளும் சில பகுதிகளில் முடங்கியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.
பனிப்பொழிவால் மின் கம்பங்கள் மற்றும் மின்சாரத்தை கடத்தும் கம்பிகள் சேதமடைந்துள்ளதால் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்புயல் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் சுமார் 8 பேர் வீட்டை விட்டு வெளியில் வந்ததால் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக மோசமான பனிப்புயல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
