
நான்கு முக்கிய கோரிக்கைகளை ஜெய்சங்கரிடம் முன்வைத்த செந்தில் தொண்டமான்
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிக்கு இருத்தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் முக்கிய 4 கோரிக்கைகளை முன்வைத்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்து கொடுக்கும் வரை அவர்களுக்கான தற்காலிக வீடுகளை அமைத்து கொடுத்தல், தற்போது வசிக்கும் இடத்தில் இருந்து மாற்று இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்கள் செல்லும் போது அவர்களுக்கு தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் ஆகையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குதல், இந்திய பிரதமர் நரேந்தரமோடி இலங்கை வருகை தந்த போது இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
OCI அட்டையை பெருந்தோட்ட சமூகத்தினர் பெற்றுக் கொள்வதில் கடினமான நடைமுறைகள் இருப்பதால் அதை இலகுப்படுத்துவதுதற்கு பிறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளி தமிழர் எனவும், அல்லது கண்டியில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்தியாவில் இருந்து வந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளமையால் அவற்றை ஆய்வு செய்து OCI அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் செந்தில் தொண்டமானால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

