
ஆபிரிக்க கிண்ணம் செனகல் வசம்
மொரோக்கோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெரும் சர்ச்சைக்குப் பின்னர் மேலதிக நேரத்தில் கோல் புகுத்தி செனகல் இரண்டாவது முறையாக ஆபிரிக்க கிண்ணத்தை வென்றது.
24 அணிகளுடன் மொரோக்கோவில் நடைபெற்ற ஆபிரிக்க கிண்ண கால்பந்து தொடரின் (அப்கொன்) இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.
இதில் போட்டியின் முழு நேரத்தில் இரு அணிகளும் கோல் புகுத்த தவறியது. எனினும் போட்டியின் முழு நேரம் முடியும் தருணத்தில் மொரோக்கோ அணிக்கு வழங்கிய பெனால்டி வாய்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு அரங்கில் இருந்த செனகல் ரசிகர்களும் குழப்பத்தை விளைவித்தனர். 17 நிமிடங்கள் தாமதத்தின் பின்னர் செனகல் வீரர்கள் மீண்டும் மைதானம் திரும்பியதை அடுத்து மொரோக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழக்கப்பட்டபோதும் அந்த பெனால்டியை செனகல் கோல் காப்பாளர் தடுத்தார்.
இதனால் மேலதிக நேரத்துக்குச் சென்ற போட்டியின் நான்காவது நிமிடத்தில் பபே குவாயே கோல் புகுத்தி செனகலின் வெற்றியை உறுதி செய்தார்.
