பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்

பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்

பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.00 மணி வரை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் 639 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.

நவம்பர் 28 அன்று டித்வா சூறாவளி பாரிய மண் சரிவை ஏற்படுத்தியது, இதனால், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், மின் இணைப்புகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பு கடும் சேதத்தை சந்தித்தது.

மலைப்பாங்கான மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் இன்னும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் அவர்களை கைவிடுமாறு கோராவிட்டால், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடரும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கைகள் பகல் நேரத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், மோப்ப நாய்களுடன், இந்த முயற்சிகளுக்கு உதவுவி வருகின்றனர்.

மழை தொடர்ந்தால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே, நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலையால் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, சில நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

“சில இடங்களில், நிலச்சரிவுகள் இன்னும் தீவிரமாக உள்ளன. தேடுதல் நடவடிக்கைகளுக்காக அந்த இடங்களை அடைவது ஆபத்தானது. உதாரணமாக, துல்ஹிரியாவில் மக்களை மீட்க விரைந்த மூன்று பேர் மீது மண் மேடு சரிந்து விழுந்து உயிருடன் புதைந்தனர்.

மேலும், சில இடங்களில், தேடல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஏனெனில் அந்த பணியை தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது,” என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )