செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 31 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் அவரைப் போன்ற ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், முன்னாள் இராணுவ மேஜரும் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல், உடவல வீதியில் வசிக்கும் 53 வயதுடைய முன்னாள் இராணுவ மேஜர் மற்றும் 33 வயதுடைய பெண் என அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களிடம் இருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகை ஐஸ் குஷ் கேரளா கஞ்சா இரண்டு சொகுசு கார்கள் தங்க ஆபரணங்கள் பெறுமதியான கைபேசிகள் மற்றும் பல இலத்திரனியல் உபகரணங்கள் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன
இஷாரா செவ்வந்தி என்ற பெண் அநுராதபுரம் நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சோதனையை நடத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.