அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – ஆசிரியர், மாணவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – ஆசிரியர், மாணவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் விஸ்கான்சின் பாடசாலையில் 15 வயதான மாணவி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக மாணவர் ஒருவரும், ஆசிரியை ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவியும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 270,000 பேர் வசிக்கும் மேடிசன் மாநிலத் தலைநகரில் அமைந்துள்ள 400 மாணவர்கள் வரை கல்விப் பயிலும் அபண்டன்ட் லைஃப் கிறிஸ்டியன் பாடசாலையில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக மேடிசன் பொலிஸ் தலைவர் ஷோன் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஆசிரியர் மீதும் மூன்று மாணவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நடாலி ரூப்னோவ் என அடையாளம் காணப்பட்டார், அவர் சமந்தா என்ற பெயரிலும் இருந்துள்ளார் என என்று பார்ன்ஸ் கூறினார்.

ஒரு பெண் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவம் அமெரிக்காவில் மிக அரிதாகவே நடந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அனைத்து துப்பாக்கிச் சூடுகளிலும் சுமார் மூன்று வீதம் மட்டுமே பெண்களால் நிகழ்த்தப்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு அமெரிக்காவில் 322 பாடசாலை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை 1966ஆம் ஆண்டு முதல் நடந்த பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு பதிவான 349 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This