வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.
2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும்.
இன்று 7வது நாளாக நடைபெற்று வரும் வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில், வரவு செலவு திட்ட விவாதம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கும்.
குறித்த விவாதம் மாலை 6:00 மணி வரை தொடரும், அதன்பின்னர், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதற்கிடையில், இன்று நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார,
“தற்போதைய அரசாங்கம் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
விலையேற்றம், வரிக் குநைப்பு , மருந்து பொருட்களின் விலைக் குறைப்பு, அரச பணியாளர்களை ஏமாற்றியுள்ளது, ஐஎம்எப் மறுசீரகை்கப்படவில்லை என பல வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளது.
இத்தகைய காரணங்களால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியாக நாம் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.