அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறை

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கும் வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில் 2025.04.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பாக ஜனாதிபதியும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை கீழ்க்காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
• அரச சேவையின் சம்பளத் திருத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்.
• அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசிற்குச் சொந்தமான கம்பனிகள் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின்படி சம்பளத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்காக 110 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சம்பள திருத்தங்களுடன் தொடர்புடைய சம்பள திருத்தங்களை அரச நிறுவனங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் 18 மாதங்களில் அதிகரித்த சம்பளத்தை செலுத்துவதற்கு மட்டும் 330 பில்லியன் ரூபாய் தேவை. இந்த 15 நாட்களுக்குள் நிறுவனங்கள் தங்கள் சம்பள திருத்தங்களை திருத்திக் கொள்ளலாம்.” என்றும் அவர் கூறினார்.