
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்தலைவரான பிரேமதாச, தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, சபை உறுப்பினர்களின் “மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால்” ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோருகின்றேன்.
சமூகங்கள் மனிதாபிமான ஆதரவை நம்பியுள்ள இச்சமயத்தில், சோமே மற்றும் அவரது தன்னார்வக் குழுவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டார்.
அவசரகால நிவாரண முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு செயலையும் கட்சி சகித்துக் கொள்ளாது என்று பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட மாநகர சபை உறுப்பினர்கள் மீது கட்சித் தலைமை கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
