மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

இதனை தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். பிறகு சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி மற்றும் மனு நம்பூதிரி ஆகியோர் மூலம் மந்திரம் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். மேலும் இருவரும் தந்திரி முன்னிலையில் அபிஷேகம் செய்யப்படுவார்கள்.

மறுநாள் 17-ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீசனையொட்டி நிலக்கல், எருமேலியில் ஒரே நேரத்தில் 14 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

மாத பூஜை நாட்களில் பம்பையில் ஹில்டாப் மற்றும் ஜக்கு பாலம் பகுதியில் சிறிய வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது சீசனிலும் இதே நிலை தொடரும். இந்த இரு இடங்களில் 2 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தம் செய்யலாம்.

சீசன் சமயத்தில் மாநில எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் விபத்து மூலம் மரணம் அடைந்தால் விபத்து காப்பீடாக பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மேலும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல (வெளி மாநிலங்களுக்கு) ரூ.1 லட்சம் வரையிலான செலவை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு மண்டல பூஜையையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. தற்போது ஒரு மாத காலத்திற்கான முன்பதிவு (தினசரி 70 ஆயிரம்) முடிந்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் உடனடி தரிசன முன்பதிவு சேவையை (தினமும் 20 ஆயிரம் பக்தர்கள்) பயன்படுத்தி கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Share This