
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் தீவிரம்
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, டொனால்ட் டிரம்பின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை நடத்திய சில மணி நேரங்களிலேயே, ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய உக்ரைனில் உள்ள முக்கிய தொழில் நகரமான Kremenchuk மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீர், மின்சாரம், மற்றும் வெப்ப விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் 77 உக்ரைன் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
அமைதி ஒப்பந்தம் குறித்த விபரங்கள் மற்றும் ரஷ்யாவுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இருதரப்பும் விவாதித்ததாக Zelenskyy தெரிவித்துள்ளார்.
நாளை லண்டனில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், Zelenskyy, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron மற்றும் ஏனைய தலைவர்கள் சமாதான முயற்சிகள் குறித்து நேரில் விவாதிக்கவுள்ளனர்.
போர்நிறுத்தம் ஏற்பட்டாலும் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன
