அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, செர்னிஹிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய இராணுவம் உக்ரேனிய போக்குவரத்து வசதிகள், எரிபொருள் மற்றும் எரிசக்தி வசதிகளை குறிவைத்து தாக்குதல்களை முன்னெத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரெமென்சுக் நகரத்தின் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் எரிசக்தி மற்றும் நீர் வசதிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வேண்டுமென்றே எரிசக்தி நிறுவல்கள் மற்றும் நீர் வசதிகளை குறிவைத்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், ரஷ்யா குளிர் காலத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி போரை நடத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமைதி வெறும் 10 மீட்டர் தொலைவில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க அமைதித் திட்டத்தில் பாரிய மாற்றங்களை விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகமான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் அமெரிக்க பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உக்ரைன் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து பயனுள்ள தகவல்களைப் பெற்றதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் டான்பாஸின் 90 சதவீத பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது, தற்போது அந்த பகுதியை விட்டுக்கொடுக்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பின்னர், ரஷ்ய இராணுவம் சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )