அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரச விழா இன்று (10) பிற்பகல் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

புதிய மகாநாயக்க தேரருக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சன்னஸ் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மகாநாயக்க தேரருக்கு விஜினிபத்திரத்தை வழங்கினார்.

1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி மாத்தறை, கம்புருபிட்டியவில் பிறந்து, 1962 ஆம் ஆண்டு வண, பலாங்கொடை ஆனந்த மைத்திரி தேரரால் புத்த பிக்குவாக துறவு வாழ்வில் நுழைந்த வண, கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலான துறவற வாழ்வில் அவரது மத, சமூக மற்றும் கல்வி சேவைகளை பாராட்டும் விதமாக அமரபுர மகா நிக்காயவினால் மகாநாயக்க பதவி வழங்கப்பட்டது.

வீழ்ச்சியடைந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் மகா சங்கத்தினரின் தலைமையிலான மதஸ்தலங்களுக்கு மிகப்பெரிய

மற்றும் அசைக்க முடியாத பொறுப்பு உள்ளது என்று இப்புனித நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் அரசியல் சாதனைகள் எவ்வளவு எட்டப்பட்டாலும், நல்ல சமூகம் உருவாக்கப்படாவிட்டால், அவை எதுவும் பயனளிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள சமூகக் கட்டமைப்பை சட்டத்தின் மூலம் மட்டும் சீ்ர்படுத்த முடியாது என்றும், நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தபெருமான் உட்பட அனைத்து மத குருமார்களும் உபதேசித்த மீட்சியின் சாராம்சம் குறித்த வலுவான கருத்தாடல் நாட்டிற்கு உடனடியாகத் தேவை என்றும் குறிப்பிட்டார்.

பௌத்த கருத்தாடல் சட்டம் தொடர்பாக மகாநாயக்க தேரர்களுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றும், விகாரை தேவாலகம் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் 42 க்கான திருத்தங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சங்க நிறுவனத்தை முறைப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை மகாநாயக்க தேரர் தலைமையிலான சங்க சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மகா நாயக்க தேரரின் வாழ்க்கை வரலாறு குறித்த நினைவுப் புத்தகமும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டன.

மூன்று நிக்காயாக்களின் மகா சங்கத்தினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், விகாரைகளின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This