
1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு
நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்ததுடன், 3-0 என்ற கோல் கணக்கில் அல்-நாஸ்ர் அணியையும் வெற்றிபெற செய்திருந்தார்.
இந்த இரண்டு கோல்களுடன் கழகம் மற்றும் தேசியப் போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை 956 ஆக உயர்ந்தது.
2022ஆம் ஆண்டு அல்-நாசரில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த ஜூலை மாதம் அந்த அணியுடனான இரண்டு வருட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன் அவர் 42 வயதை கடந்தும் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று துபாயில் இடம்பெற்ற குளோப் கால்பந்து விருது வழங்கும் நிகழ்வில் பேசிய ரொனால்டோ, “தொடர்ந்து விளையாடுவது கடினம், ஆனால் நான் உந்துதலாக இருக்கிறேன்”என்றார்.
“ஆர்வம் அதிகமாக உள்ளது, நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். நான் எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமல்ல.
நான் எப்போதும் கால்பந்து விளையாடுவதை ரசிக்கிறேன், மேலும் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். எனது இலக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
நான் கோப்பைகளை வெல்ல விரும்புகிறேன், நீங்கள் அனைவரும் அறிந்த அந்த எண்ணிக்கையை (1,000 கோல்களை] அடைய விரும்புகிறேன். காயங்கள் இல்லாவிட்டாலும், நான் நிச்சயமாக அந்த எண்ணிக்கையை அடைவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த மாதம் “விரைவில்” கால்பந்தில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக” ரொனால்டோ தெரிவித்திருந்தார்.
சவுதி புரோ லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நான்கு புள்ளிகள் முன்னிலை வகிக்கும் அல்-நாசர் அணிக்காக இந்த பருவத்தில் ரொனால்டோ 14 போட்டிகளில் 13 கோல்களை அடித்துள்ளார்.
போர்ச்சுகல் (143) மற்றும் ரியல் மாட்ரிட் (450) அணிகளுக்காக அதிக கோல்கள் அடித்த சாதனையை ரொனால்டோ தக்க வைத்துள்ளார்.
மேலும் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் மற்றும் அல்-நாசர் ஆகிய நான்கு அணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் தக்க வைத்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் 2026 உலகக் கால்பந்து தொடரே தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று ரொனால்டோ முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
