ரொனால்டோவின் தீவிர ரசிகர் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் வரவேண்டும் என்ற கனவு கண்ட 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
மேற்குக் கரையைச் சேர்ந்தவர் நஜி அல் பாபா, பந்தை உதைக்க ஆரம்பித்ததில் இருந்தே பெரிய கால்பந்து நட்சத்திரமாக வர வேண்டும் என்று கனவு கண்டார்.
நஜியின் விருப்பமான வீரர் போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். அவரைப் போலவே உலகமே அறியும் கால்பந்து நட்சத்திரமாக மாறவேண்டும் என்ற கனவில் இருந்தார்.
இருப்பினும், பதினான்கு வயது இளைஞனின் கனவுகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நஜி தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பிறந்தவர்களுக்கு உயிர்வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல. இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு ஆளாகாத ஒரு குழந்தைப் பருவமே இல்லை.
கால்பந்தை மட்டுமே மனதில் கொண்டு, ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள ஹல்ஹுல் என்ற இடத்தில் உள்ள விளையாட்டுக் கழகத்தில் நஜி மணிக்கணக்கில் பயிற்சி எடுத்து வந்தார்.
பாடசாலை முடிந்த பிறகு, நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதில் தான் அவரது முழு சந்தோசமும் இருந்தது.
நவம்பர் மூன்றாம் திகதி நஜி தனது பெற்றோரிடம் அனுமதிப்பெற்று கால்பந்து விளையாடச் சென்ற பிறகு இஸ்ரேலிய இராணுவத்தால் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பாடசாலையில் இருந்து வந்ததும் நண்பர்களுடன் விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார் நஜி. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேல் இராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.
நஜியும் அவரது நண்பர்களும் பாலஸ்தீனியர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு நியாயப்படுத்தியது.
தடயவியல் அறிக்கையின்படி, நஜியின் உடலில் நான்கு தோட்டாக்கள் தாக்கியுள்ளன. ஒன்று இடுப்பில், மற்றொன்று இதயத்தில், மூன்றாவது காலில் மற்றும் நான்காவது தோளில்.
சுடப்பட்ட பின்னர், நஜி மருத்துவ சிகிச்சை பெறாமல் 30 நிமிடங்கள் தரையில் கிடந்தார், இறுதியாக அவர் உயிரிழந்துள்ளார். நஜி உயிரிழந்த நாளில் அசாதாரணமாக எதுவும் நடைபெறவில்லை என அவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
‘நான் காலையில் பெத்லகேமுக்கு வேலைக்குச் சென்றேன். நாஜி பாடசாலைக்குச் சென்றார். நண்பகல் 12 மணியளவில் நான் வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது நஜி தனது பாடசாலைக்கு அருகில் வீட்டிற்குச் செல்வதைப் பார்த்தேன்.
நாங்கள் என் டிரக்கில் ஏறி ஒன்றாக வீட்டிற்கு வந்தோம். மதிய உணவிற்கு, சகோதரிகள் நஜிக்கு பிடித்த உணவை செய்திருந்தனர். பின்னர், வீட்டுக்கு அருகில் உள்ள தாத்தாவின் மளிகைக் கடைக்கு நண்பர்களுடன் விளையாடச் செல்ல அனுமதி கேட்டுள்ளார்.
மதியம் மூன்று மணியளவில் அவர் தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். “அதுதான் நான் அவரை உயிருடன் பார்த்த கடைசி சந்தர்ப்பம்” என்று அல் ஜசீராவிடம் நிடால் கூறினார்.
நிடாலின் ஆறு குழந்தைகளில் நஜி ஐந்தாவது குழந்தை. நஜி சுட்டுக் கொல்லப்பட்டதை உறவினர்தான் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார். நஜியின் தந்தையும் மாமாவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நிடால் தனது மகனைப் பார்க்க வேண்டும் என கூச்சலிட்டதால் இஸ்ரேலிய வீரர்கள் நிடாலை கைவிலங்கிட்டு 40 நிமிடங்களுக்கும் மேலாக தரையில் கிடத்தினார்கள். நிடால் இது தனது வாழ்க்கையின் கடினமான 40 நிமிடங்கள் என்று விவரித்தார்.