இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்ய வேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கோரிக்கை

ஏதிலி அந்தஸ்துக் கோரி இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளுக்களின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்ய ஏதிலிகளின் நிலை தொடர்பில் அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
நாடற்றவர்களாக, ஏதிலி அந்தஸ்து கோரியுள்ளவர்களை தொடர்ந்தும் தடுப்புக்காவிலில் வைத்திருக்கின்றமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையானது, அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும், நீடித்த தீர்வுகளுக்கான தடையாக அது அமையும் எனவும், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளுக்களின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய அவர்களின் தடுப்புக்காவலை நீக்கி, ஏதிலிகளாக பதிவு செய்வதற்கு தாம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
116 ரோஹிங்ய ஏதிலிகளை ஏற்றிய படகொன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம், முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.