தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி – நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
தலதா மாளிகை மீதான ஒரு தாக்குதல் மற்றும் விடுதலை புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் குறித்த வீதி, மூடப்பட்டதாகவும் தற்போது வட பகுதியில் உள்ள பல வீதிகள் திறக்கப்படுவதுடன் காணிகளும் விடுவிக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
தலதா மாளிகைக்கு முன்பாகவுள்ள வீதி இன்றுவரை வாகன போக்குவரத்துக்காக திறக்கப்படாமல் உள்ளமை, கண்டி நகரின் வளிமாசடைவுக்கு பாரியளவில் பங்களிப்பதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது பரவலாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அரசாங்கம் கூறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மேலும் தெரிவித்தார்.
இதன்போது, குறுக்கிட்ட சபாநாயகர், சுற்றிவளைக்காமல் கேள்வியை மட்டும் கேட்டுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, கருத்துவெளியிட்ட ரோஹினி கவிரத்ன, இந்த விடயங்களை விபரிக்காமல் கேள்விகளை எழுப்ப முடியாது என தெரிவித்திருந்தார்.
எனினும், சபாநாயகர் தொடர்ந்தும் குறுக்கிட்டதால் வாயை மூடிக் கொண்டு, தாம் கூறுபவைகளை செவிமடுக்குhறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது, சபாநாயகர் சபை நாகரீகத்துடன் கருத்துகளை வெளியிடுமாறு எச்சரித்திருந்த நிலையில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, ரோஹினி கவிரத்னவின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டதுடன் அதனை மீளப் பெறுமாறு கோரியிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் அமையின்மையின்மை நிலவியது.
எவ்வாறாயினும், தலதா மாளிகைக்கு முன்பாகவுள்ள வீதி மீள திறக்கப்படாமைக்கு காரணமாக என்னவென ரோஹினி கவிரத்ன வினவியிருந்தார்.
அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றால் தலதா மாளிகைக்கு முன்பாக, மூடப்பட்டுள்ள வீதியை அரசாங்கம் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, குறித்த வீதி மூடப்பட்டு 36 வருடங்கள் ஆகின்றமையினால் பொலிஸாரிடனம் அது தொடர்பாக போதிய தகவல்கள் இல்லை என தெரிவித்தார்.
அத்துடன், தலதா மாளிகை மீதான தாக்குதல் தொடர்பான விடயங்களை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அதுபற்றிய போதிய தகவல்கள் உள்ளதாகவும் முறையாக தேடியறியுமாறும் தெரிவித்தார்.