அரிசி பற்றாக்குறை இனி ஏற்படாது – உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன ; அரசாங்கம் அறிவிப்பு

அரிசி பற்றாக்குறை இனி ஏற்படாது – உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன ; அரசாங்கம் அறிவிப்பு

எதிர்காலத்தில் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என்பதுடன், எதிர்வரும் போகத்தின் அறுவடையுடன் குறிப்பிடத்தக்களவு அரிசி கையிருப்பை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

”அரிசி தொடர்பில் சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. அதிகமான இடங்களில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சந்தையில் விலை தளம்பல் ஏற்பட்டால் அதனை சமநிலைப்படுத்த அரசாங்கம் பலத்தை கொண்டிருக்க வேண்டும். எதிர்வரும் போகம்முதல் குறிப்பிடத்தக்களவு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  அதற்காக அரச களஞ்சியசாலைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலதிக களஞ்சியசாலைகளும், நிதியும் தேவைப்படுகிறது.

அதேபோன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அரிசியை இறக்குமதி செய்யவும் நாம் பின்நிற்க போவதில்லை. உள்நாட்டில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவை அடைவதே எமது கொள்கையாகும். என்றாலும், அதனை பூர்த்தி செய்ய முடியாத இடத்தில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாதத்தின் பின்னர் அரிசி விலை உயர்வடையாது. அத்துடன், பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் முகாமைத்துவம் செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நெல் கொள்வனவு விலைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

அரிசி ஆளை உரிமையாளர்களுடன் சுமூகமாகவே செயல்பட விரும்புகிறோம். அவர் சட்டவிரோதமாக செயல்பட்டால் மக்களின் பக்கம் நின்றே நாம் தீர்மானங்களை எடுப்போம். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாக்கும் தேவை எமக்கு உள்ளது.” என்றார்.

Share This