அரிசிக்கான தட்டுப்பாடு 7ஆம் திகதியின் பின் நீங்கும் – அரசாங்கம் அறிவிப்பு
ஜனவரி 7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிகப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் ஊடாக கடந்த காலத்தில் நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு நீங்கும். அரசாங்கம் இறக்குமதி செய்த 5200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி கடந்த 30ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்றது. அதனை பகிர்ந்தளிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் கட்டமாக 520 மெற்றிக்தொன் எமது கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை பகிர்ந்தளித்து வருகிறோம்.
இறக்குமதி செய்யப்பட்டஅரிசியை நான்கு கட்டங்களாக விநியோகித்துள்ளோம். மேலும் 5200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் அனுமதியையும் நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளோம். எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த தொகை எமக்கு கிடைக்கப்பெறும்.
7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இதற்கு அப்பால் மேலும் 28ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம். நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரசாங்கம் நாட்டு அரிசியை மாத்திரமே இறக்குமதி செய்துள்ளது.” என்றார்.
இதேவேளை, தனியார் துறையினர் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், சிவப்பு அரிசிக்கு பாரிய தட்டுபாடுகள் இருப்பதாகவும் அரிசியின் விலைகள் கட்டுப்பாட்டு விலையில் இல்லை என்றும் நுகர்வோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.